< Back
மாநில செய்திகள்
ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு போன்றதாகும்
திருப்பூர்
மாநில செய்திகள்

'ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு போன்றதாகும்'

தினத்தந்தி
|
16 July 2023 10:28 PM IST

மகளிருக்கான உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு என்பது போன்றதாகும் என்று பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, மகளிரணி, பாசறை அமைத்தல் மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

20-ந்தேதி ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின்கட்டணமும், குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. மொத்தத்தில் தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி வரும் 20-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பெண்களுக்கு உரிமைத்தொகை

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி துணை செயலாளர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் கணேசன், இம்மானுவேல், நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்குநகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் பி.கே.முத்து முன்னிலையிலும், கோல்டன்நகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மகளிருக்கு உரிமைதொகை ரூ.1000 வழங்குவதில் தகுதியானவர்களுக்கு என்ற ஒரு புதிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பப் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அரசே ஒரு தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கலுக்கு 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கொரோனா நிதியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு என்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்