பொள்ளாச்சி வழக்கு: அரசாணையை எதிர்த்த வழக்கு- அபராதத்துடன் தள்ளுபடி
|பொள்ளாச்சி வழக்கு: அரசாணையை எதிர்த்த மனுவை 50 ஆயிரம் அபராதத்துடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு வெளியானது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் 9 பேர் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், தங்களது பெயர்களும் வெளியில் வந்து விடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, பாதிகப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தனி பிரிவுக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை 50 ஆயிரம் அபராதத்துடன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.