கரூர்
அம்பேத்கர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
|பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மத்திய மாநகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மத்திய கிழக்கு மாநகர செயலாளர் கோல்டுஸ்பாட் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து பழைய திண்டுக்கல் ரோடு, ஜவகர்பஜார் வழியாக பேரணியாக வந்து மனோகரா கார்னர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சியினர்..
இதேபோல நாம் தமிழர் கட்சி, புரட்சி பாரதம் கட்சி சார்பிலும் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நொய்யல்-தோகைமலை
நொய்யல், புன்னம்சத்திரம், புகழூர் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தோகைமலை, பாதிரிபட்டி, பில்லூர், கல்லடை, பொருந்தலூர், நாகனூர், சின்னையம்பாளையம், கூடலூர், கள்ளை, கழுகூர் மற்றும் சிவாயம் ஆதனூர் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கழுகூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாகவும் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.