திருச்சி
பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
|பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க. சார்பில் மாலை
தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பெரியாரின் பிறந்த நாளான நேற்று சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் பூபதி, கவுன்சிலர் அம்பிகாபதி, என்ஜினீயர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பெரியார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜவஹர்லால்நேரு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
அ.ம.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையிலும், திராவிடர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் அன்புராஜ் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
கல்லக்குடி, துவாக்குடி
கல்லக்குடியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. தனது அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் கோல்டன்ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி, மாநகர செயலாளரும், மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன் தலைமையில், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் காட்டூர் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் பெரியார் மருத்துவமனையில் உள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.என்.சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் செந்தில், நீலமேகம், சிவக்குமார், தர்மராஜ், மற்றும் மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், கூத்தப்பார் பேரூராட்சி செயலாளர் தங்கவேல், பேரூராட்சி தலைவர் செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.