திண்டுக்கல்
அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
|திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில்
மறைந்த முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக தி.மு.க. சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கபட்டது.
அ.தி.மு.க.வினர் மரியாதை
அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கண்ணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.