பெரம்பலூர்
சுற்றுலா சென்ற பெரம்பலூர் மாவட்ட பெண் போலீசார்
|பெரம்பலூர் மாவட்ட பெண் போலீசார் சுற்றுலா சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றில் பெண் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக பெண் ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பெண் போலீசாரின் பணியினை பாராட்டும் வகையிலும், மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக பணிபுரிய ஏதுவாக அமையும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பிய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், பெண் போலீசார் அனைவரையும் நேற்று ஒரு நாள் சுற்றுலா அழைத்து சென்றார். இதில் அவர்கள் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் மாளிகைமேடு ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பெண் போலீசார் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கும்மியடித்தும், கலை நிகழ்ச்சியில் நடனமாடியும், பாட்டு பாடியும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது குறித்து பெண் போலீசார் கூறுகையில், நாங்கள் போலீஸ் பணியில் சேர்ந்ததில் இருந்து இதுபோன்று சக பெண் போலீசாருடன் ஒன்றாக இன்ப சுற்றுலா சென்றது இல்லை. முதல் முறையாக எங்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்று, எங்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.