< Back
மாநில செய்திகள்
மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற போலீஸ்காரர்: விருதுநகரில் பரபரப்பு
மாநில செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற போலீஸ்காரர்: விருதுநகரில் பரபரப்பு

தினத்தந்தி
|
30 April 2024 6:31 PM IST

மனைவியின் கள்ளக்காதலனை போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மைனர் (வயது 40). இவர் சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்தார். இவருடைய மனைவி மாலதி (38). மைனர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்தார். மாலதி குழந்தைகளுடன் ராஜபாளையம் துரைசாமிபுரத்தில் வசித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). இவர் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மாலதிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மைனருக்கு அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மைனர் மற்றும் அவரது அண்ணன் பாண்டியராஜ் (42), நண்பர் அழகர்சாமி (42) ஆகியோர் சரவணனை கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து மாலதியுடன் தொடர்பை கைவிடாமல் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், துரைசாமிபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மைனர் சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார். இந்த சமயத்தில் பல முறை கூறியும் தொடர்பை துண்டிக்காமல் இருந்த சரவணன் மீது ஆத்திரத்தில் இருந்தார். பின்னர் மைனர், பாண்டியராஜ், அழகர்சாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்போனில் சரவணனை தொடர்பு கொண்டு பேசி, அவரை தனியாக வரும்படி கூறினர். அதை நம்பி, அவரும் வந்தார்.

அப்போது மைனர் உள்ளிட்ட 3 பேரும், சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்மாயில் பதுங்கி இருந்த பாண்டியராஜ், அழகர்சாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல ராஜபாளையம் ரெயில்நிலையத்தில் பதுங்கி இருந்த போலீஸ் ஏட்டு மைனரை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்