< Back
மாநில செய்திகள்
நிலத்தகராறு வழக்கில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - ஆடியோ வைரலானதால் சிக்கினார்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நிலத்தகராறு வழக்கில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - ஆடியோ வைரலானதால் சிக்கினார்

தினத்தந்தி
|
2 July 2023 3:53 PM IST

செங்கல்பட்டு அருகே நிலத்தகராறு வழக்கில் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நபர் லஞ்சமாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு போலீஸ்காரருடன் பேசிய ஆடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸ்காரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டை ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியதாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்டபோலீஸ் நிலைய எழுத்தர் சண்முகம், எதிர் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக தமிழ்மணியிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தமிழ்மணியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி சண்முகத்திடம் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இந்த நிலையில் இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் விசாரணை நடத்தி சண்முகத்தை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் சண்முகம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்த வண்ணம் உள்ளன. அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மேலரிப்பாக்கம் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக இருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து துப்பாக்கியை மட்டும் பறிமுதல் செய்த சண்முகம் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள இரவு நேர தள்ளுவண்டி கடைக்காரரிடம் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது.

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் கணிசமான தொகையை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் கழிவு நீர் ஏற்றி செல்லும் லாரியை மடக்கி லஞ்சம் கேட்ட 2 போலீசாரின் ஆடியோ வெளியான நிலையில் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது மீண்டும் அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் எழுத்தர் சண்முகத்தின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்