< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மாநில செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
22 Aug 2022 5:28 AM IST

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி:

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள களியல் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ஓமனா. இவர்களுடைய மகன் சஜித் (வயது 23). இவர் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் சஜித் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தார். நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களுடன் இறகு பந்து விளையாடிய அவர் இரவில் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்க சென்றார்.

இந்தநிலையில் சஜித் நேற்று காலையில் தனது அறையில் இருந்து வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய அண்ணன் சரத் அறைக்கதவை தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை.

இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, சஜித் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சஜித்தை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சஜித்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி கடையல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்