< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
2 Oct 2023 2:02 AM IST

சிவகாசி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 63). இவர் சாத்தூர் தாலுகாவில் உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் பேப்பர் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள்.

மூத்த மகன் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் முடிந்து இந்திராநகர் பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். 2-வது மகன் வைரமுத்து(25). கடந்த 2022-ம் ஆண்டு போலீசில் சேர்ந்தார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-ம் அணியில் ராஜபாளையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

திருமணம்

இந்தநிலையில் போலீஸ்காரர் வைரமுத்துவுக்கு திருமணம் செய்ய வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பார்த்து நிச்சயம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஈரோட்டில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வருவதாக வைரமுத்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பெண் பார்க்கும் போதே இதனை கூறி இருந்தால் திருமணம் நிச்சயம் வரை சென்று இருக்காது அல்லவா? என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனை யில் இருந்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் 2 நாள் விடுமுறையில் சிவகாசிக்கு வந்த வைரமுத்து வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு பாஸ்கரன் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவர், வைரமுத்துவை சந்திக்க வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் வைரமுத்து தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பாஸ்கரன் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து வைரமுத்துவை மீட்டனர்.

விசாரணை

பின்னர் அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், வைரமுத்துவை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்