< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Oct 2023 6:44 PM IST

திருமுல்லைவாயல் அருகே குடும்ப தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜார்ஜ் (வயது 29). இவர் ஆவடியில் உள்ள 5-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். இவரது தந்தை கோபாலகிருஷ்ணன் குடும்பத்துடன் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

ஜார்ஜ் கன்னியாகுமரியில் வசிக்கும் தனது உறவினர் மகளான பிரானா (வயது 29) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வி (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஜார்ஜ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எஸ்.எம். நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

ஜார்ஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்- மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஜார்ஜ் மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

மது போதையில் வரும்போது எல்லாம் ஜார்ஜ் 'நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன்' என்று அடிக்கடி கூறியதாக தெரிகிறது. எப்போதும் வழக்கம் போல் அப்படித்தான் சொல்லுகிறார் என்று நினைத்த பிரானா தனது குழந்தையுடன் வீட்டின் ஹாலில் படுத்து தூங்கினார். ஜார்ஜ் படுக்கையறைக்கு தூங்குவதற்காக சென்றார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து பிரானா எழுந்து படுக்கையறைக்கு சென்று பார்த்த போது ஜார்ஜ் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உயிரிழந்த ஜார்ஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஜானகி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (36), சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி சங்கீதா (33). நேற்று கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சங்கீதா படுக்கை அறையின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கீதா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்