< Back
மாநில செய்திகள்
மண்டைக்காடு கோவில் சமய மாநாடு விவகாரம்: போராட்டத்தை கட்டுப்படுத்த குமரி முழுவதும் போலீஸ் குவிப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மண்டைக்காடு கோவில் சமய மாநாடு விவகாரம்: போராட்டத்தை கட்டுப்படுத்த குமரி முழுவதும் போலீஸ் குவிப்பு

தினத்தந்தி
|
19 Feb 2023 9:34 PM GMT

மண்டைக்காடு கோவில் விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் அறிவித்ததால் குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:

மண்டைக்காடு கோவில் விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் அறிவித்ததால் குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி போராட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின்போது ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த மாநாட்டில் அரசியல் பேசுவதாக கூறி இந்த ஆண்டு மாநாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்து அறநிலைய துறை சார்பில் சமய மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற இருந்த மாநாட்டிற்கு தடை விதித்ததற்கு பா.ஜனதா, இந்து முன்னணி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மண்டைக்காடு பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

போலீசார் கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து போராட்டத்துக்கு வருபவர்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கியமாக மண்டைக்காடுக்கு வரும் வழிகளில் போலீசார் நியமிக்கப்பட்டு போராட்டத்துக்கு வரும் இந்து அமைப்பு நிர்வாகிகளை தடுத்த நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து இந்து நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் வகையில் டெரிக் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, பறக்கை ரோடு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதிலும் டெரிக் சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மண்டைக்காட்டில் டி.ஐ.ஜி...

மண்டைக்காட்டிலும் ஏராமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதன்படி கோவில் நடை வாசல், கடற்கரை சந்திப்பு, தெப்பக்குளம், லட்சுமிபுரம் சந்திப்பு, குளச்சல் காமராஜர் பஸ் நிலையம், மணலிவிளை, கூட்டுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், தென் மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரம் போலீசார் அழைத்துவரப்பட்டு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நெல்லை டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார், குமரி மாவட்ட சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் கைவிடப்பட்டது

இதற்கிடையே தடையை மீறிய போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து மதியத்துக்கு பிறகு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்