< Back
மாநில செய்திகள்
காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு - கடலூரில் பரபரப்பு
மாநில செய்திகள்

காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு - கடலூரில் பரபரப்பு

தினத்தந்தி
|
12 March 2023 7:48 AM IST

தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்ட நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி, சுரங்க விரிவாக்க பணியை தொடங்கி உள்ளது. இதை கண்டித்து பா.ம.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருந்த காவலர்கள் நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை காவலர்கள் வந்த அதிவிரைவுப்படை வாகனம் திடீரென தீப்பிடித்து எறிந்தது. உடனே தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்