திருநெல்வேலி
பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச் சம்பவங்களை தடுக்க டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
|பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் குற்றச் சம்பவங்களை தடுக்க டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள், காய்கறிகள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் டிரோன் கேமராவை பறக்க விட்டு போலீசார் கண்காணித்து வருகிறார். நேற்று மாலையில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் டிரோன் கேமராவை பறக்க விட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவே இதுபோன்ற கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
அப்போது மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாசிவம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.