சென்னை
பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - துணை கமிஷனர் நடவடிக்கை
|பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள மோட்டார் வாகன பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல். இவர், 2021-ம் ஆண்டு 36 வயதான பெண்ணிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
ஆனால் அதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், அந்த பெண்ணை மிரட்டி வருவதாகவும் தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார்.
அந்த புகார் குறித்து பள்ளிக்கரணை போலீசாரை விசாரிக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் சப்-இன்ஸ்பெக்டர் முன்ஜாமீன் பெற்றார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடந்தது. ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்காமல் பணியில் இருந்து சென்றதாகவும், உச்சநீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு கைதானதாலும், துறை ரீதியான விசாரணைக்கும் ஆஜராகாமல் வந்தாலும் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரூஸ் கால்டுவெலை நிரந்தரமாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.