திண்டுக்கல்
5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு; 5 ஆயிரத்து 823 பேர் எழுதினர்
|மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வை, 5 ஆயிரத்து 823 பேர் எழுதினர்.
மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வை, 5 ஆயிரத்து 823 பேர் எழுதினர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் பொது தேர்வர்களுக்கும், 2-வது நாளில் போலீஸ் துறையில் பணியாற்றும் தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பொது தேர்வர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 920 பொதுத்தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு பி.எஸ்.என்.ஏ. கல்லூரி, எஸ்.எஸ்.எம். கல்லூரி, சக்தி கல்லூரி, பார்வதீஸ் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
பலத்த சோதனை
இதையொட்டி காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் வரத்தொடங்கினர். ஒருசில தேர்வு மையங்களில் காலை 9 மணிக்கு நீண்ட வரிசையில் தேர்வர்கள் காத்திருந்தனர். இதையடுத்து தேர்வர்கள் கொண்டு வந்திருந்த பைகள் மையத்துக்கு வெளியே வாங்கி வைக்கப்பட்டன. ஹால்டிக்கெட் வைத்திருந்த தேர்வர்களை தவிர மற்றவர்கள் யாரும் தேர்வு மையத்தின் வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இதற்காக தேர்வு மையத்தில் நுழைவுவாயில் ஹால்டிக்கெட் சரிபார்ப்பு, இதர சோதனை என தனித்தனியாக போலீசார் பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு மையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வீடியோ கேமராவில் பதிவு
மேலும் ஸ்மார்ட் கைக்கெடிகாரம், கால்குலேட்டர், செல்போன், புளுடூத் கருவி உள்பட அனைத்து மின்னணு சாதனங்களும் போலீசார் பறித்து கொண்டனர். இளைஞர்கள் முழுக்கை சட்டையை மடித்து அணி கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். பெண்களை, பெண் போலீசார் சோதனை செய்தபின்னரே அனுமதித்தனர்.
அதேபோல் ஒவ்வொரு தேர்வு அறையிலும் சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தேர்வு முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக தனியாக போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதுதவிர தேர்வில் காப்பியடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகளை தடுக்க அதிகாரிகளை கொண்ட பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பறக்கும் படையினர் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் திடீர் சோதனை நடத்தினர்.
மேலும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் 5 தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது தேர்வு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 5 ஆயிரத்து 823 பேர் எழுதினர். 1,097 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் துறையில் பணியாற்றும் தேர்வர்கள் 1,440 பேருக்கு பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் தேர்வு நடக்கிறது.