< Back
மாநில செய்திகள்
வழிப்பாதையை அடைத்த மர்ம கும்பல்: தொப்பூர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குடியேறிய விவசாயி
தர்மபுரி
மாநில செய்திகள்

வழிப்பாதையை அடைத்த மர்ம கும்பல்: தொப்பூர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குடியேறிய விவசாயி

தினத்தந்தி
|
12 Sept 2023 1:00 AM IST

நல்லம்பள்ளி:

வழிப்பாதையை மர்ம கும்பல் அடைத்து விட்டதாக கூறி தொப்பூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் குடியேறி நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சந்திரநல்லூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி (வயது 46), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கும்பல், அர்த்தனாரி வீட்டுக்கு சென்று வரும், வழிப்பாதையில் இரும்பு வேலிகள் மூலம் அடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கும்பல், விவசாயி குடும்பத்தை வீட்டில் இருந்து வெளியேற்றி கதவை பூட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தொப்பூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அர்த்தனாரி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, தனது வீட்டுக்கு செல்லும் வழிப்பாதையில் உள்ள இரும்பு வேலியை அகற்றக்கோரியும், வீட்டை பூட்டி கொலை மிரட்டல் விடுத்த மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் விவசாயி அர்த்தனாரி தனது குடும்பத்துடன், பாய்-தலையணை மற்றும் போர்வையுடன், தொப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் காலி இடத்தில் அமர்ந்து நேற்று குடியேறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் தொடர்பாக, அங்கு பணியில் இருந்த போலீசார், விவசாயி அர்த்தனாரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விவசாயி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்