மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
|மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சீர்காழி சத்யா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான சீர்காழி சத்யா கடந்த 2021-ல் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாமல்லபுரம் பகுதியில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த சீர்காழி சத்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்றனர். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சத்யாவிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சுட்டதில் காலில் பலத்த காயம் அடைந்த சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.