திருவள்ளூர்
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் குப்பையில் வீசப்பட்டிருக்கும் போலீசாருக்கான ஷூக்கள்
|திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் அருகிலுள்ள குப்பைகள் கொட்டும் பகுதியில் மூட்டையாக கட்டி ஷூக்கள் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஷூக்களை கடந்த 2 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் அனைத்தும் தனியாக எடுத்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் அருகிலுள்ள குப்பைகள் கொட்டும் பகுதியில் மூட்டையாக கட்டி ஷூக்கள் போடப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்காக சுத்தம் செய்யும்போது அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஷூக்களை மூட்டையாக கொண்டு வந்து குப்பையில் போட்டுவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஷூக்களை ஊர்க்காவல் படை, போலீஸ்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர்களுக்காவது போலீஸ்துறை சார்பில் வழங்கியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.