< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்

பாலக்கரை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு

தினத்தந்தி
|
28 Sep 2022 7:51 PM GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைதொடர்ந்து பாலக்கரை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 ஆண்டுகள் தடை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகம், கேரளா உள்பட 13 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்தனர். இதையடுத்து என்.ஐ.ஏ. மற்றும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த அலுவலகம் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

மேலும் பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை, ஜெயில் ரோடு, காந்தி மார்க்கெட் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

74 பேர் கைது

இந்தநிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து நேற்று மாலை திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு உறுப்பினர் கென்னடி தலைமையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோரி துண்டு பிரசுரம் வினியோகித்தனர். அதன்பிறகு ஆர்ப்பாட்டமும் நடத்த முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 74 பேரை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். சிறிதுநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்