இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
|சென்னை விமான நிலையத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
1996-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம், 'இந்தியன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்குகிறார். சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதன் பெரும் பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது 500க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பயணிகள் போன்று வேடமணிந்து நடித்து வருகின்றனர்.
இதில், விமான தாக்குதலில் இருந்து தப்பிப் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவதால், விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.