சுதந்திர தின விழா: பாம்பன் ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
|சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாம்பன் ரெயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம்:
நாடு முழுவதும் நாளை மறுநாள் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல் தமிழகத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும், கடலுக்குள் அமைந்துள்ள 100 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில் பாலத்திலும் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் ரெயில்வே இருப்பு பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், தனுஷ்கோடி ஆகியோர் தலைமையில் ரெயில்வே போலீசார் பாம்பன் ரெயில் பாலத்தில் கையில் துப்பாக்கியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில்வே பணியாளர்களை தவிர பாம்பன் ரெயில் பாலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி நபர்கள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.