< Back
மாநில செய்திகள்
போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகை பறிப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
21 May 2022 12:25 PM IST

கொளப்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே போலீஸ் என்று கூறி பெண் என்ஜினீயரிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நியூ பெருங்களத்தூர் எஸ்.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 33). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணிபுரியும் நண்பர் குபேரனுடன் கொளப்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் தான் போலீஸ் என்று கூறி, குபேரனை சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து வரச்சொல்லியுள்ளார். ஆகவே நீங்கள் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலியை ஹேமலதாவிடம் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார்.

குபேரனும் ஹேமலதாவிடம் தங்கச்சங்கிலியை கொடுத்துவிட்டு போலீஸ் என்று கூறிய வாலிபருடன் சென்றார். சிறிது நேரம் கழித்து குபேரனுடன் அங்கு வந்த நபர் உங்களையும் குபேரனையும் நேரில் விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் இங்கே வருகிறார்.

நீங்கள் அதிகமாக நகை அணிந்து இருப்பதை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தால் உங்களிடம் பணம் அதிகமாக கேட்பார். ஆகையால் நீங்கள் அணிந்து இருக்கும் 7½ பவுன் தங்க நகை மற்றும் குபேரன் உங்களிடம் கொடுத்த 2½ பவுன் தங்கச்சங்கிலி போன்றவற்றை என்னிடம் கொடுத்து விடுங்கள். சப்-இன்ஸ்பெக்டர் உங்களை விசாரித்து விட்டு சென்ற பிறகு நான் உங்களிடம் தந்து விடுகிறேன் என்று கூறி நகையை வாங்கி கொண்டார். சற்று நேரத்தில் அந்த வாலிபர் திடீரென தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து ஹேமலதா ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

மேலும் செய்திகள்