கள்ளக்குறிச்சி
கனியாமூர் பள்ளி கலவரத்தில் காவல்துறை, வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது
|அனுபவ ரீதியாக நாங்கள் கூறிய கருத்தை ஏற்கவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி கலவர சம்பவத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தோல்வி அடைந்துவிட்டது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளா
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை வரும் என அனுபவரீதியாக ஆலோசனை கூறினார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக காவல்துறை ஒரு புகழ்பெற்ற காவல்துறை. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்?, எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பியிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும். வன்முறையாளர்கள் பள்ளி உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது காவல்துறை பயந்து ஓடுகிறது.
உள்நோக்கம் இல்லை
காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றபோது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரை எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அது கொலையாக இருந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள கல்விக்கூடங்களில் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்ய வேண்டும்.
புதிய கல்விக்கொள்கை
குழந்தை மரணத்தை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வன்முறையாளர்கள், கொள்ளையர்களை கண்டுபிடித்து வாழ்க்கையில் இனிமேல் இதுபோன்று தவறுகள் செய்யாதவாறு அவர்களை தண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுவது தவறு. காரணம் தமிழக முதல்-அமைச்சரும், தமிழக மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.