கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு
|ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1-வது நுழைவுவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டை வீசிய ரவுடி கருக்கா வினோத் (வயது 42) பிடிபட்டார். அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று கவர்னர் மாளிகை தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் ரவுடி கருக்கா வினோத் மீது இந்த வழக்கு பாயவில்லை. அவர் மீது 436 (பொது கட்டிடத்துக்கு தீ வைத்து சேதப்படுத்த முயற்சிப்பது), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது), 506 (2) (கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது), வெடிபொருள் தடுப்பு சட்டம் பிரிவு 3 (வெடிபொருட்களை பயன்படுத்தி ஒருவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது சொத்தை சேதப்படுத்துவது), 4 (பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது) ஆகிய 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் இரவோடு, இரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன்படி 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிண்டி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.