< Back
மாநில செய்திகள்
அதிக வட்டி தருவதாக மோசடி புகார்: தமிழகம் முழுவதும் 26 இடங்களில் போலீசார் சோதனை - ரூ.3½ கோடி பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

அதிக வட்டி தருவதாக மோசடி புகார்: தமிழகம் முழுவதும் 26 இடங்களில் போலீசார் சோதனை - ரூ.3½ கோடி பறிமுதல்

தினத்தந்தி
|
25 May 2022 6:36 AM IST

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.3½ கோடி சிக்கியது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு 'ஆருத்ரா கோல்டு' என்ற நிதி நிறுவனம் செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் இதற்கு கிளைகள் உள்ளன.

கவர்ச்சிகர விளம்பரம்

இந்த நிறுவனம் தங்க நகைகள் மீது கடன் மற்றும் பொதுமக்களிடம் முதலீட்டு தொகையும் வசூலித்து வந்ததாக தெரிகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சியாக அறிவிப்பு வெளியிட்டதால், இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் பணத்தை முதலீடாக கொட்டியதாகவும், இந்த அளவுக்கு வட்டி கொடுக்க முடியாது என்றும், இதில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புகார்கள் வந்தன.

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறப்பட்டதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

26 இடங்களில் சோதனை

இதனால் இந்த நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூர்வாங்க விசாரணைக்கு பிறகு நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென்று நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அதன் கிளைகளிலும் சோதனை நடத்தினார்கள்.

26 இடங்களில் நேற்று காலை தொடங்கி மாலை வரை இந்த சோதனை நீடித்தது.

செங்கல்பட்டு, திருவள்ளூர்

இதன்படி செங்கல்பட்டில் 12 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ..83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ரூமேஷ்குமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர்.

திருவள்ளூரிலும் சோதனை நடந்தது. இதில் ரூ.1 கோடியே 20 லட்சம் சிக்கியது.

இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடியில் இந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பட்டாபிராமன் என்பவரது வீடு உள்ளது. இங்கு சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளாங்காடு கிராமத்தில் உள்ள இந்த நிறுவன அதிகாரியின் உறவினர் மணிகண்டன் என்பவரது வீட்டிலும், ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் இயங்கி வந்த கிளை அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.

நிதி நிறுவனம் விளக்கம்

இதற்கு ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'அதிக வட்டி தருவதாக எங்கள் நிறுவனம் சார்பில் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எங்கள் நிறுவனம் பெயரில் யாரோ இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில்தான் இந்த சோதனை நடப்பதாகவும்' கூறப்பட்டுள்ளது.

8 பேர் மீது வழக்கு

இதற்கிடையே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் மீதும், அதன் துணை நிறுவனங்கள் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரிஷ், ராஜசேகர், செந்தில்குமார், பட்டாபிராமன், மைக்கேல்ராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் தவறான வாக்குறுதி கொடுத்து முதலீட்டு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளது.

2 பேர் கைது; ரூ.3.41 கோடி பறிமுதல்

26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 48 கம்ப்யூட்டர், மென்பொருள், 6 லேப்-டாப்கள், 44 செல்போன்கள், 60 பவுன் தங்கம், 2 கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் வசூலித்த பணம் டெபாசிட் செய்யப்பட்ட 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குனர்களான பாஸ்கர், மோகன்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளை குறிப்பாக இந்த வழக்கு விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

@ eowtn7of2022@gmail.com என்ற இணையதள முகவரியிலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுக்களை அனுப்பலாம். பொதுமக்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியாகும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்களை பார்த்து தெரிந்து முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்