ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்கு அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையொட்டி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு பலியானார். கைதானவர்களில் அருள், மலர்கொடி, ஹரிஹரன், ஹரிதரன், சிவா ஆகியோர் வக்கீல்கள் ஆவார்கள்.
இந்த கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து போலீசாரின் கைது வேட்டை நீடித்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் தினம், தினம் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில் திரைமறைவில் இருந்து செயலாற்றியதாக பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம், இதன் மூலம் வாங்கிய சொத்துக்கள் எவ்வளவு என ஆய்வு செய்து பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.