மதுரை
இன்ஸ்பெக்டர் வசந்தியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் மனு
|ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் புகார்தாரருடன் சமரசம் பேசிய இன்ஸ்பெக்டர் வசந்தியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் அளிக்கும்படி வசந்தி உள்ளிட்டோருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் புகார்தாரருடன் சமரசம் பேசிய இன்ஸ்பெக்டர் வசந்தியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் அளிக்கும்படி வசந்தி உள்ளிட்டோருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் சொந்தமாக பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்துடன் மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்தார். அங்கு ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்காக மாவு மில் அருகில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி போலீஸ் வாகனத்தில் வந்து, அர்ஷத்திடம் விசாரித்துள்ளார். பின்னர் ரூ.10 லட்சத்தை பையுடன் இன்ஸ்பெக்டர் வசந்தி பறித்துக்கொண்டதாகவும், இந்த பணத்தை திரும்ப கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அர்ஷத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கைது
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது வழக்குபதிவு செய்தனர். 2 மாதமாக தலைமறைவாக இருந்த வசந்தியை போலீசார் கைது செய்தனர். சில மாதங்கள் கழித்து அவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் இந்த வழக்கின் புகார்தாரருடன் சமரசம் ஏற்பட்டதால் ரூ.10 லட்சம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கைதான இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கையை ஐகோர்ட்டு நிராகரித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வசந்தி மீதான வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மதுரை ஐகோர்ட்டில் தற்போது ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டவர்களை நிபந்தனை ஜாமீனில் கோர்ட்டு விடுவித்துள்ளது. அதாவது சாட்சிகளை கலைக்க கூடாது, மிரட்டக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுதான் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.
ஆனால் புகார்தாரருடன் சமாதானமாக போவதாக தெரிவித்துள்ளதால் அவர்கள் இந்த நிபந்தனையை மீறி உள்ளனர். எனவே அவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு குறித்து இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.