திருவாரூர்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்
|திருவாரூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
திருவாரூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
பணம் கேட்டதாக புகார்
திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வைத்தியநாதன். இவர் விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ேமாட்டார் சைக்கிளை விடுவிப்பதற்காக அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதேபோன்று திருவாரூர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் தீபக். சம்பவத்தன்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த அவர், ஆயுதப்படை மகளிர் காவலர்கள் தங்கி இருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்ததாக புகார் வந்தது.
பணியிடை நீக்கம்
இந்த புகார்களின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து வைத்தியநாதன், தீபக் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் திருக்களார் போலீஸ் நிலையத்தில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்பவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக போலீஸ்காரர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பரபரப்பு
அதேபோல் மதுபோதையில் தவறாக நடந்து கொண்ட பரவக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரை தஞ்சை சரக டி.ஐ.ஜி பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை காவலர் என 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.