< Back
மாநில செய்திகள்
கார் வெடிப்பு சம்பவம்: கோயம்புத்தூரில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்
மாநில செய்திகள்

கார் வெடிப்பு சம்பவம்: கோயம்புத்தூரில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்

Dailythanthi
|
3 Nov 2022 1:55 PM IST

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூரில் சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்தனர்.

கோயம்புத்தூர்,

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூரில் சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். விசாரணையில், முபீன் தனது கூட்டாளிகளுடன் கோயம்புத்தூரில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து முபீனுடன் தொடர்பில் இருந்த அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இறந்த முபீன் வசித்த கோட்டைமேடு, கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இறந்த முபீன் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வசித்த வீடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு முபீன் பல முறை அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபீனின் வீட்டில் இருந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதி வரை உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

மேலும் அதன் ஹார்டு டிஸ்க்குகளையும் என்.ஐ.ஏ. போலீசார் கைப்பற்றி சென்றனர். இறந்த முபீனின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். தற்போது அந்த செல்போனில் முபீன் பதிந்து வைத்திருந்த செல்போன் எண்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் அவர் யார்-யாரிடம் அடிக்கடி போன் பேசியுள்ளார்? என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த விவகாரத்தில் கைதான 6 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது.

கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோயம்புத்தூரில் மட்டும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் த.மு.மு.க. அமைப்பின் பிரமுகர்கள் வீடு உள்ள 18 இடங்களில் போலீசார் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள், சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்தனர். அது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் போலீசார் தொடங்கினர். இந்த பட்டியல் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்