கடலூர்
நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்எல்சி தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|நெய்வேலியில் ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி வடக்குத்து சீனிவாசா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன்(வயது 62). இவருடைய மனைவி கலாவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் ஒரு மகள் துபாயில் வசித்து வருகிறார். அவருக்கு துணையாக இருப்பதற்காக கலாவதி கடந்த 3 மாதத்திற்கு முன்பு துபாய்க்கு சென்றார்.
இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று காலை கலாவதி விமானம் மூலம் சென்னை வருவதாக இருந்தது. அவரை அழைத்து வருவதற்காக வேல்முருகன், தனது வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டார். பின்னர் நேற்று காலையில், இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
நகை கொள்ளை
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை.
வேல்முருகன் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றி அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.