கடலூர்
நெய்வேலி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|நெய்வேலி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி,
நெய்வேலி அடுத்த வீணங்கேனி பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் பாலமுருகன்(வயது 37). இவர் அதே பகுதியில் மணல், ஜல்லி உள்ளிட்டு வீடு கட்டுமானம் பொருட்களை மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாலமுருகன், தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி அனுஷ்காவுடன் கத்தாழை கிராமத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நெல் நடவு பணிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 8½ பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளி, ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
வலைவீச்சு
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.