< Back
மாநில செய்திகள்
பச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் சாவு:தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்?போலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

பச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் சாவு:தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்?போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
18 Jun 2023 1:28 AM IST

பச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் சாவு:தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்?போலீசார் விசாரணை

தம்மம்பட்டி

பச்சைமலை அருவியில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்து சென்றது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி வாலிபர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சைமலையில் மங்களம் அருவி உள்ளது. சேலம், திருச்சி மாவட்ட எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவியில் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த தமீம்பாஷா (வயது 23), ஜெஸ்வந்த் (24), விசாந்த் (24) ஆகியோருக்கும், திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கும் இடையே சமூக வலைதளங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வாலிபர்கள் 3 பேரும் ஒரு காரில் கடந்த 15-ந் தேதி தா.பேட்டைக்கு வந்து அந்த இளம்பெண்ணை சந்தித்து பேசி உள்ளனர். பிறகு அவர்கள் அந்த இளம்பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு மங்களம் அருவிக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து 4 பேரும் அருவி பகுதிக்கு வந்தனர்.

2 பேர் சாவு

அப்போது, தமீம் பாஷா, ஜெஸ்வந்த் ஆகியோர் அருவியின் கீழே உள்ள தண்ணீர் நிறைந்த குட்டையில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதனை பார்த்து உடன் வந்த விசாந்த் மற்றும் அவர்களுடன் வந்த இளம்பெண் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் இதுபற்றி தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த தமீம் பாஷா, ஜெஸ்வந்த் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

இதனிடையே நேற்று முன்தினம் இறந்துபோன வாலிபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் உடல்களை ஒப்படைக்க காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்தூரில் இருந்து மேல் சிகிச்சைக்காக விசாந்த் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மயக்க நிலையில் இருப்பதால் எதற்காக பச்சைமலை அருவிக்கு சென்றார்கள்? என்ற விவரம் தெரியவில்லை.

அவர் கண் விழித்தால் மட்டுமே அந்த இளம்பெண்ணை காரில் அங்கு அழைத்து சென்றது ஏன்? அந்த பெண்ணுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணை அழைத்து சென்றது ஏன்?

இது ஒருபுறம் இருக்க, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு இளம்பெண்ணுடன் 3 வாலிபர்கள் எதற்காக சென்றனர்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், அவர்கள் சென்ற காரில் மதுபாட்டில்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே, 2 வாலிபர்கள் சாவில் மர்மம் இருப்பதாக அவர்களது பெற்றோர்கள் கருதுகிறார்கள். இதனால் உயிர் தப்பிய விசாந்த் மற்றும் அந்த இளம்பெண்ணிடம் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தெரிவிக்கும் தகவலை வைத்து தான் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்