விசாரணை கைதி ராஜ சேகர் மரணத்திற்கு காவல்துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - காவல் ஆணையர் பேட்டி
|விசாரணை கைதி ராஜ சேகர் மரணத்திற்கு காவல்துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் (வயது 31) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த நிலையில் ராஜசேகரின் உடற்கூராய்வு அறிக்கையை விரைவில் வழங்கவும் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராஜசேகரின் உடற்கூராய்வு முடிந்து அதன் முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் ராஜசேகரின் உடலில் கால்களில் சிறிய காயங்கள், கைகளில் ரத்தக்கட்டு, காலின் பின்புறத்தில் சதைப்பகுதியில் ரத்தக்கட்டு, தொடைப்பகுதியில் காயங்கள் உள்ளிட்டவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த விவகாரம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விசாரணை கைதி ராஜசேகரின் உடலில் 4 காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 காயங்களும் 18 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்கு முன்பான காயங்கள். போலீசார் கைது செய்து 10 மணி நேரம் தான் ராஜ சேகர் காவலர்கள் வசம் இருந்தார்.
விசாரணை கைதி ராஜ சேகரை காவலர்கள் தாக்கவில்லை என்பதற்கு விசாரணை அறிக்கையே சாட்சி. காவல் சித்ரவதை நடைபெறவில்லை. ராஜ சேகர் மரணத்திற்கு காவல்துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.