கரூர்
மாவட்ட கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
|மாவட்ட கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கரூர் லட்சுமிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 19-ந்தேதி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது கரூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது சம்பந்தமாக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் அழகர்சாமி பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. அவர் எந்த குற்ற செயலிலும் ஈடுபட வில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை எனது வீட்டிற்கு அடையாளம் தெரியாத 10 பேர் வந்து போலீஸ் என கூறி கணவரை பற்றி விசாரித்தனர். அவர் வெளியூர் சென்று விட்டார் என சொன்னபோது, வீட்டில் இருந்த எனது மகன் பாரத்தை வலுகட்டாயமாக அழைத்து சென்று விட்டனர். இதனால் எனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.
65 பேர் மீது வழக்கு
பின்னர் வெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூரில் கடந்த 19-ந்தேதி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இருந்த மாவட்ட கவுன்சிலர் திருவிகாவை கடத்தி சென்றனர்.
மேலும் அந்த தேர்தலில் போட்டியிட வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்களை உள்ளே விடாமல் தடுத்தார்கள். பின்னர் வேறு வழியாக உள்ளே சென்று தேர்தல் நடந்தது. அப்போது அராஜகம் செய்த தி.மு.க.வினர் மீது வழக்கு போடவில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்த 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நடவடிக்கை இல்லை
தி.மு.க. அரசை கண்டித்து கரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்றியசெயலாளர், பகுதி செயலாளர் மீது பொய் வழக்கு போட்டு பொதுக் கூட்டத்தை நடத்த விடக்கூடாது என்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார்கள். இது நடக்காது. மாவட்ட கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் எந்த விதமான நடவடிக்கையும் போலீசார் இதுவரை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.