அரசு வேலை வாங்கி தருவதாக வங்கி காசாளரிடம் ரூ.70¼ லட்சம் மோசடி - காய்கறி வியாபாரி கைது
|அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வங்கி காசாளரிடம் ரூ.70¼ லட்சம் மோசடி செய்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிபிசரண்(வயது 36). இவர் சம்பவத்தன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு வேலை
நான் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் பிரிவில் காசாளராக பணிபுரிந்து வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்து சென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர்(48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் தனக்கு செல்வாக்கு அதிகளவில் இருப்பதாவும், தனது செல்வாக்கை பயன்படுத்தி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம், ஆவின் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தர முடியும் என்று கூறினார்.
ரூ.70 லட்சம் மோசடி
இதை உண்மை என்று நம்பிய நான் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சாமல்பட்டியை சேர்ந்த சுதாகர், குரும்பேரி கிராமத்தை சேர்ந்த கண்ணியப்பன், மாதம்பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார், கேரிகப்பள்ளிகேட்டை சேர்ந்த திருவேங்கடம் ஆகியோரிடமும், உப்பாரபட்டி கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினேன்.
இதையடுத்து அவர்கள் கொடுத்த மொத்தம் ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்தை கடலூரில் உள்ள வங்கி உள்பட பல்வேறு வங்கிகள் மூலமாகவும், நேரடியாகவும் சிவசங்கரிடம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவர், அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கைது
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சிவசங்கரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வந்த சிவசங்கர், தனது தொழிலை விரிவுபடுத்தவும், குடும்ப செலவுக்கு தேவையான பணம் இல்லாததாலும் திட்டமிட்டு பணத்தை பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.