தஞ்சாவூர்
என்.ஐ.ஏ. தேடி வரும் வாலிபரின் தந்தை உடல்நலக்குறைவால் இறப்பு - வாலிபரை எதிர்பார்த்து போலீசார் குவிப்பு
|என்.ஐ.ஏ. தேடி வரும் வாலிபரின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு அந்த வாலிபர் வருவார் என எதிர்பார்த்து அய்யம்பேட்டை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.ஐ.ஏ. தேடி வரும் வாலிபரின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு அந்த வாலிபர் வருவார் என எதிர்பார்த்து அய்யம்பேட்டை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. பிரமுகரான இவர், அதே ஊரில் சமையலுக்கு தேவையான பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட சிலரை ராமலிங்கம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மத மாற்றம் செய்தவர்களுக்கும், ராமலிங்கத்துக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ராமலிங்கத்தை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த 13 பேரை கைது செய்தனர்.
ரூ.5 லட்சம் சன்மானம்
போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானுதீன், சாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
அவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. இதில் தேடப்படுபவர்களில் ஒருவரான புர்கானுதீன் (வயது32) என்பவர் அய்யம்பேட்டை அருகே உள்ள வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆவார்.
தந்தை மரணம்
இந்த நிலையில் புர்கானுதீன் தந்தை முகமது பாரூக்(70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இறந்தார்.
அவருடைய உடல் நேற்று அதிகாலை சொந்த ஊரான வடக்குமாங்குடி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
போலீசார் குவிப்பு
தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க புர்கானுதீன் வரக்கூடும் என எதிர்பார்த்து வடக்குமாங்குடி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கரிகால்சோழன், அனிதா கிரேசி கலைவாணி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
உடல் அடக்கம்
நேற்று மதியம் 2 மணி அளவில் முகமது பாரூக் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதே கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. பல மணிநேரம் கண்காணித்து வந்த நிலையில் புர்கானுதீன் அங்கு வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வரும் வாலிபர் தனது தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவார் என எதிர்பார்த்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி முழுவதும் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.