சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
|சென்னை தி.நகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டது. மேலும், தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை இன்று போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து வரப்படுகிறார்.
இதற்கிடையே, கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகர் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். சவுக்கு சங்கருக்கு கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா? வீட்டில் கஞ்சா பொருட்களை பதுக்கி வைத்துள்ளாரா? என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.