< Back
மாநில செய்திகள்
செஞ்சி பகுதியில் போலீஸ் குவிப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சி பகுதியில் போலீஸ் குவிப்பு

தினத்தந்தி
|
19 July 2022 10:04 PM IST

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம சாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப்பில் பதிவு வெளியானதை அடுத்து செஞ்சி பகுதியில்போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது

செஞ்சி

மாணவி சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி மர்ம சாவை கண்டித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போராட்டம் கடந்த 17-ந் தேதி வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப் குழுவில் தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்களையும் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் செஞ்சியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செஞ்சி கூட்டு ரோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சீருடையில் சென்ற 6 கல்லூரி மாணவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக கூறியதை அடுத்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.

கடும் நடவடிக்கை

செஞ்சியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து மேற்கொண்டு யாரேனும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.



மேலும் செய்திகள்