< Back
மாநில செய்திகள்
இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது போலீசில் புகார்
திருச்சி
மாநில செய்திகள்

இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
7 July 2023 1:26 AM IST

இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்தை விற்றதாக புகார்

பிரபல திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவின் கணவர் ஆவார். விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியை சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், தனது மனைவி பிரேமாவுடன் லால்குடியிலும், அவரது சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி சரோஜாவுடன் கோவையிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு குஞ்சிதபாதம், தனது அண்ணன் மாணிக்கத்துடன் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எங்களுக்கு தெரியாமல் சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்றுவிட்டார். அதில் பல வில்லங்கங்கள் உள்ளது. ேமலும் எங்கள் பொது சொத்தை விற்ற கிரைய பத்திரத்தில், மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால், தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துக்களின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி, அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து...

எனவே மோசடியாக பொது சொத்தை விற்றது தொடர்பாக சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு, முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.

உதவ வேண்டும்

இது குறித்து குஞ்சிதபாதம் கூறியதாவது:- எனக்கு இருதயத்தில் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள என்னிடம் அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லை. இதனால் எனது அண்ணன் மாணிக்கத்திடம், குடும்ப சொத்தில் எனக்கு சேர வேண்டியதை விற்று உதவுமாறு கேட்டேன். ஆனால் சொத்தை ஏற்கனவே விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து முறைகேடாக விற்று, அண்ணன்கள் மற்றும் தம்பிகளை ஏமாற்றி விட்டார்.

இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும், மீதி பங்குகள் 8 பேருக்கும் உரியது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மாணிக்கம் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாய் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே வில்லங்கம் தீரும். மேலும் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு விரைவில் இருதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், சொத்தை விற்க விக்னேஷ் சிவன் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இது குறித்து விக்னேஷ் சிவனின் சித்தி சரோஜா கூறுகையில், எனது கணவர் குஞ்சிதபாதம் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. எனவே எனது கணவரை காப்பாற்ற சொத்தை மீட்டு தர வேண்டும், என்றார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்