சென்னை
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை
|அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
சென்னையில் வரும் ஜூலை 3 ந் தேதி வரை ஒலி மாசு விழிப்புணர்வு வாரமாக போக்குவரத்து போலீசார் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி இன்று சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தின் தொடக்கவிழாவானது சென்னை அசோக்பில்லர் சிக்னல் அருகே நடந்தது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி சிக்னல் அருகிலும் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டு வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டினார்.
நிகழ்ச்சியின் முடிவில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிகஅளவில் ஹாரன் ஒலியை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசு உண்டாகிறது. ஒலி மாசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஓவிய போட்டிகள் நடத்த உள்ளோம். மேலும் சென்னையில் 100 சாலைகளில் ஒலி மாசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். ஒலி மாசு தொடர்பாக போக்குவரத்து போலீசார் அதிக அளவில் வழக்குகள் போடவில்லை.
இனிமேல் அதிக வழக்குகள் போடப்படும். இதற்காக ஒலி மாசு அளவை கண்டறியும் கருவிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வாங்க உள்ளோம்.
தற்போது ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் ரூ.1000 முதல் ரூ. 2000 வரை அபராத தொகை வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி இருக்கும் வாகன ஓட்டிகள் மீதும், அது போன்ற ஹாரன்களை பொருத்தி கொடுக்கும் மெக்கானிக்குகள் மீதும் நடவடிக்கை பாயும். இந்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட் டுள்ளது.
முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.