சென்னை
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
|சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக வரைபட செயலி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான நவீன திட்டங்களை போலீசார் அறிமுகம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னை நகர போக்குவரத்து சிக்னல்கள் நவீனப்படுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக 'டிரோன்'கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
மத்திய அரசின் 'நிர்பயா' திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களை போலீசார் செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது வரைபட செயலி (மேப்) மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் ஒன்றை சென்னை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
இதற்கான கட்டுப்பாட்டு மையம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 8-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய திட்டம் பற்றி கூடுதல் போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:-
இந்த புதிய திட்டத்தின்படி 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் 7 வருட காலங்கள் சென்னை நகரில் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய தகவல் வரைபட செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன குற்றங்கள், எந்தெந்த இடங்களில் எப்போது நடைபெற்றது? என்பது பற்றிய விவரங்கள் இந்த புதிய செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக வைத்து இந்த வரைப்பட செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 2023-ம் ஆண்டு நடைபெறும் குற்றங்கள் பற்றிய தகவலும் இந்த புதிய செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் குற்றச்சம்பவங்கள் எங்கெங்கு, எப்போது நடைபெற்றது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் குற்றவாளிகள் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 701 கொலை சம்பவங்கள் எங்கெங்கு நடந்தது என்பது பதிவாகி உள்ளது.
அடையார், புளியந்தோப்பு போலீஸ் மாவட்டங்களில் கொலை குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளது. அதிலும் ஞாயிறு, திங்கள் போன்ற நாட்களில் தான் கொலைகள் அதிகமாக நடந்துள்ளது. கொலை சம்பவங்கள் எங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றங்களும் எங்கெங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை வரைபட செயலியில் பதிவு செய்துள்ளோம். மேலும் பள்ளி-கல்லூரிகள் எங்கெங்கு உள்ளது. வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் எங்கெங்கு உள்ளது? போன்ற விவரங்களும் இந்த செயலியில் பதிவாகி உள்ளது.
பெண்கள் தங்கும் விடுதிகள் எங்கெங்கு இருக்கின்றன? என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும் போது உடனடியாக ரோந்து வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த ரோந்து வாகனங்களில் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட இடங்களுக்கு விரைந்து சென்று உதவி செய்வார்கள். அந்த வகையில் 290 ரோந்து வாகனங்கள் தற்போது உள்ளன. இந்த வாகனங்களின் நடமாட்டத்தை அறிவதற்காக அவற்றில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் இந்த வரைபட செயலியோடு இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சி ஷரத்கர், மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.