சென்னை
86 வயது மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய போலீஸ் கமிஷனர்
|சென்னை போலீஸ் கமிஷனர், 86 வயது மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவரது மகனை கண்டுபிடித்து மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி, வெங்கட்ரங்கம் தெருவைச் சேர்ந்தவர் அனுசுயா. 86 வயது மூதாட்டியான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் இறந்து விட்டார். நான் எனது மகனுடன் வசித்து வந்தேன். 2013-ம் ஆண்டு, வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு எனது மகன் வீட்டை விட்டு, வெளியேறி காணாமல் போய் விட்டான். அதன்பிறகு அவனது நிலை என்ன?, என்பது பற்றி தெரியவில்லை. அவனை கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும். நான் வசிக்கும் பகுதியில் அசைவ உணவு அதிகம் சமைத்து சாப்பிடுகிறார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் வாழும் பகுதியில் எனக்கு வீடு ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் கூறி இருந்தார்.
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மூதாட்டி அனுசுயாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டுக்கும் அனுப்பி வைத்தார்.
கமிஷனர் உத்தரவின் பேரில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அனுசுயாவின் மகன் மும்பையில் இருப்பதும், அவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது. செல்போன் நம்பரை வைத்து அவரிடமும் போலீசார் பேசி, உடனடியாக சென்னை வந்து, அவரது தாயாரை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் அனுசுயாவை அவரது வீட்டில் நேரடியாக சந்தித்து, உங்களது மகன் உங்களை விரைவில் வந்து சந்திப்பார், என்ற தகவலை தெரிவித்தனர். இன்னும் ஒரு மாதத்தில், சைவ உணவு சாப்பிடுபவர்கள் வாழும் பகுதியில் உங்களுக்கு வாடகைக்கு உரிய வீடு பார்த்து தர ஏற்பாடு செய்து வருகிறோம் என்றும் கூறினார்கள். இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுசுயா, கமிஷனருக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.