கரூர்
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை
|கரூர் அருகே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீஸ் குழுவினர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் புன்னம் சத்திரம் பெரியரெங்கபாளையம் பிரிவு அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது இருசக்கர ஓட்டுனர்களுக்கு வாகன உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் உள்ளனவா? என சோதனை செய்தனர்.மேலும் நான்கு சக்கர ஓட்டுனர்களுக்கு சீட் பெல்ட் அணிந்து செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் அவரது தாயை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
எச்சரிக்கை
இதேபோல் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், குற்றங்களை தடுக்கும் வகையிலும் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகள், கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்தவர்கள், காரில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாதவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள், வேன்களில் அதிக உயரம் பாரம் ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் உரிய சான்று இன்றி வாகனம் ஓட்டி வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.