கரூர்
விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை
|கரூர் அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் விபத்துக்களை தடுக்கும் வகையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வந்த லாரிகள், கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதேபோல் கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த வாகனங்கள் என அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு
அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்தவர்கள், காரில் அமர்ந்து சீட் பெல்ட் அணியாதவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள், மேலும் லாரிகள், வேன்களில் அதிக உயரத்தில் பாரம் ஏற்றி வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நடவடிக்கை
அதேபோல் தலைக்கவசம் அணியாமல் உரிய சான்று இன்றி வாகனம் ஓட்டி வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதேபோல் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு, புன்னம் சத்திரம், நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.