சென்னை
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறி ஆசிரியையின் நகை பையை திருடிய ஆசாமி - 2 மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த போலீசார்
|கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறி அசிரியையின் நகை பையை திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் 2 மணிநேரத்தில் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 55). இவர், ஆவடி கனரக தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுவர்ணதாய் (48). இவர், அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். துறையூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர்.
பின்னர் துறையூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். வடிவேலு, தன்னிடம் இருந்த பையை பஸ்சின் இருக்கைக்கு மேல்புறம் பைகளை வைக்கும் இடத்தில் வைத்தார். பின்னர் மனைவியை பஸ்சின் இருக்கையிலேயே அமரவைத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்க கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தனது பை மாயமாகி இருப்பதை கண்டு வடிவேலு அதிர்ச்சி அடைந்தார். அதில் 14 பவுன் நகை வைத்திருந்தார்.
இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பஸ்சில் இருந்த வடிவேலுவின் பையை மர்மஆசாமி திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது ஆலந்தூர், கத்திப்பாரா அருகில் சிவகங்கை செல்லும் அரசு பஸ்சில் ஒன்றும் தெரியாததுபோல் ஏறி அமர்ந்திருந்த ஆசாமியை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சிவகங்கையை சேர்ந்த சுந்தரலிங்கம் (46) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
புகார் அளித்த 2 மணிநேரத்தில், பஸ்சில் ஏறி ஆசிரியையின் நகை பையை திருடிய ஆசாமியை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்ததுடன், நகையை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.