திருச்சி
போலீஸ்காரர் மீது கல் வீச்சு - வாலிபர் கைது
|போலீஸ்காரரை கல்வீசி தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரரை கல்வீசி தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முதல்நிலை காவலர்
திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் உள்ள தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சரண்பிரசாத். இவர் சம்பவத்தன்று திருச்சி சின்னசாமி நகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தென்னூர் சின்னசாமி நகர் பகுதியை சேர்ந்த முகமது மொய்தீன்(வயது 27) என்பவர் ரோந்து வாகனத்தை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே கிடந்த கல்லை எடுத்து சரண்பிரசாத் மீது வீசினார். இதில் அவர் காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மளிகை கடையில் திருடிய2 சிறுவர்கள் கைது
*திருச்சி பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(54). இவர் கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் செல்வகுமார் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் செல்வகுமாரின் மளிகை கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். செல்வகுமார் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 ஆயிரத்து 50, ரூ.450 மதிப்புள்ள பீடி, சிகரெட் உள்ளிட்டவைகள் திருட்டுபோய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட கருமண்டபம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயது சிறுவர்களை கைது செய்தார். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தார்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
* திருச்சி கருமண்டபம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர்.. இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ், புத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக வந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (39). இவர் அப்பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.
மது விற்றவர்கள் கைது
*காட்டுப்புத்தூர் மேக்கல் நாயக்கன்பட்டி சுடுகாட்டில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக மேக்கல்நாயக்கன்பட்டி முத்துராஜா தெருவை சேர்ந்த முத்துவீரன் (34), அதே போல ஏழூர் பட்டி வாட்டர் டேங்க் அருகில் மதுபாட்டில்கள் விற்றதாக ஏலூர்பட்டி அலியாபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் (41) ஆகியோரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.