< Back
மாநில செய்திகள்
அன்புமணியை கைது செய்த போலீஸ்...! முதல்வன் பட பாணியில்  போலீஸ் வேன் அடியில் தலையை வைத்த பாமகவினர்...!

@dir_Arumugam

மாநில செய்திகள்

அன்புமணியை கைது செய்த போலீஸ்...! முதல்வன் பட பாணியில் போலீஸ் வேன் அடியில் தலையை வைத்த பாமகவினர்...!

தினத்தந்தி
|
28 July 2023 5:45 PM IST

பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ம.க. முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது.

சென்னை

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி என்.எல்.சி.க்குள் நுழைய முயன்ற பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யபட்டார்.

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது.

விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்தப் பதற்றமான சூழலில் டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அசம்பாவிதம் ஏதும் நடைபெறமால் இருக்க இன்று மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தொண்டர்கள் சிலர் போலீஸ் வாகனத்தின் அடியில் தலைவைத்து முதல்வன் பட பாணியில் அன்புமணி ராமதாஸை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் வேன் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. போலீஸ் வேனின் முன்பும், பின்னும் பா.ம.க. கட்சியை சேர்ந்தவர்கள் அன்புமணி ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில் பா.ம.க. முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது.

போராட்டத்தை கலைக்க, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடி நடத்தி களைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்