< Back
மாநில செய்திகள்
ஐஐடியில் வேலை பார்ப்பதாக மோசடி: மனைவி இருப்பதை மறைத்து அரசு டாக்டரை மணந்த என்ஜினீயர்..!
சென்னை
மாநில செய்திகள்

ஐஐடியில் வேலை பார்ப்பதாக மோசடி: மனைவி இருப்பதை மறைத்து அரசு டாக்டரை மணந்த என்ஜினீயர்..!

தினத்தந்தி
|
16 July 2022 6:46 AM GMT

முதல் மனைவி மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து, அரசு பெண் டாக்டரை 2 வது திருமணம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 29 வயது இளம்பெண் அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த பி. டெக் பட்டதாரியான பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய மணமகன் பிரபாகரனுக்கு பெண் வீட்டார் 111 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவர் மதுபழக்கம் கொண்டவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தினசரி இரவு மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பற்றி விசாரித்ததில் தனது கணவர் பிரபாகரன் ஐ.ஐ.டியில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையில் பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும் அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் திருமணத்தின் போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று தின்றுள்ளார். இதுபற்றி கேட்டபோது பெண் டாக்டரை தினசரி அடித்து கொடுமைபடுத்தி துன்புறுத்தி வந்தார். மேலும் அவரது குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெண் டாக்டர் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் வரதட்சனை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்