< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல், மதுரையில் கைரிசை: வாகனங்களை திருடி விற்ற பலே ஆசாமி கைது
மாநில செய்திகள்

திண்டுக்கல், மதுரையில் கைரிசை: வாகனங்களை திருடி விற்ற பலே ஆசாமி கைது

தினத்தந்தி
|
13 July 2022 7:07 PM IST

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 16 இருசக்கர வாகனங்களை திருடி கிராமங்களில் விற்ற பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்த பூவகிழவன்பட்டியை சேர்ந்தவர் ராசு. விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க பைக்கில் சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றபோது பைக் திருடு போனது.

அதேபோல் திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்தவர் சின்னு, மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த மெக்கானிக் பாலசுப்பிரமணி ஆகியோரின் பைக்கும் திருடு போனது. இது தொடர்பாக 3 பேரும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அடுத்தடுத்து 3 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால், திருடனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். வாகன திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆத்தூர் அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த ஜெயராம் (வயது 52) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பல்வேறு இடங்களில் திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்கள் என 16 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில்,

திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜெயராம் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார். அவ்வாறு திருடிய மொபட், மோட்டார் சைக்கிள்களை நகரங்களில் விற்றால் எளிதில் கண்டுபிடித்து விட வாய்ப்பு உள்ளது.

இதனால் திருட்டு வாகனங்களை கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், பால் மற்றும் பூ வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று இருக்கிறார். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது 2-வது முறையாக சிக்கி இருக்கிறார், என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்